ஹென்றி ஃபோர்டு

Thursday, February 25, 2010

ஹென்றி ஃபோர்டு


1

ஹெலன் கெல்லருக்குப் பார்வை இல்லை. நோக்கம் இருந்தது.

நம்மில் எத்தனை பேருக்கு இரண்டும் இருக்கின்றன?

2

ஹென்றி போர்டுக்கு ஒரு நோக்கம் இருந்தது.

அமெரிக்காவில் கார்காலம் ஆரம்பமாக வேண்டும் என்ற நோக்கம்.

தன் கனவுக்கு நான்கு சக்கரங்களையும் உள் எரி இயந்திரத்தையும் மலிவு விலையில் பொருத்த அவரால் முடிந்தது. அவரது மாடல்-டி கார் நதியா வளையல், குஷ்பு கம்மல் மாதிரி விற்றுத் தீர்ந்தது.

நேரத்தை மிச்சப்படுத்து, வேலையை எளிமையாக்கு என்கிற எர்கானமிக்ஸ் சிந்தனை தான் போர்டு மோட்டார் நிறுவனத்தில் அஸெம்ப்ளி லைன் (பொருத்து வரிசை) உத்தியானது.

வியாபாரிக்குள் கவிஞன் இருக்கிறான். கணக்கன் இருக்கிறான். கண்டுபிடிப்பாளன் இருக்கிறான். அந்த வியாபாரி பள்ளத்தாக்கில் கிளம்பி சிகரமாகியிருந்தால் வள்ளலாகவும் இருக்கிறான்.

3

எடிசன் மின்சார நிறுவனத்தில் பதினாறு வயதில் இயந்திரப் பணியாளராகப் பயிற்சி பெறச் சேர்ந்தார் ஹென்றி ஃபோர்ட்.

தாமஸ் ஆல்வா எடிசனின் நண்பராக உயர்ந்தார்.

4

தொழிற்சாலை இயந்திரங்களில் தாமும் நட்டு போல்ட்டுகளாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்களை மரியாதையோடு பாருங்கள்.

அவர்களில் யாரோ சில பேர் ஹென்றி போர்டாக விஸ்வரூபம் எடுக்கப் போகிறார்கள்.

காற்றை விட கனமானது எப்படிப் பறக்கும் என்று முணுமுணுக்கப்பட்ட ரைட் சகோதரர்களின் மிதியுந்து வான்நோக்கி உயரவில்லையா?

ஷெல் நிறுவன எரிபொருள் அங்காடியில் பணிபுரிந்த தொழில்மேதை திருபாய் அம்பானியின் நிறுவனம் இன்று ஷெல்லுடனே ஒப்பந்தங்கள் கையெழுத்திடவில்லையா?

5

அடுத்தடுத்த தலைமுறைகளிலும் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்வது பெரிய விஷயம் தான்.

ஆனால் பூஜ்யத்திலும் பூஜ்யத்துக்குள்ளிருந்தும் ஆரம்பிப்பவன்தான் ரொம்பத் திமிர் பிடித்தவன். கண்ணதாசன் சிந்தனையைக் கடன்வாங்கினால் அவன் இறைவன்.

6

கூர்மையான வரிகளுக்காகப் பேனாவால் மண்டையைச் சொறிந்து கொள்கிறோம். சிலசமயம் படிப்பவர்களை குத்தித் தொலைத்துவிடுகிறோம்.

ஆனால் ஹென்றி போர்ட் போகிற போக்கில் உதிர்த்தவையெல்லாம் இன்று மேலாண்மை இயக்குனர்களின் பைபிள்.

7

திரு. ரத்தன் டாடாவுக்கு மட்டுமல்ல, டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் ஹென்றி போர்டு முன்னோடி.

புகைபிடிப்பது தவணைமுறைத் தற்கொலை என்று அவரும் எடிசனும் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள்.

8

தொழிலாளர்களுக்கு ஊதியத்தை இருமடங்காக்கி அமெரிக்க முதலாளிகளைத் திகைக்க வைத்தவரும் இவர்தான்.

பிற்காலத்தில் அமெரிக்க தேசியத் தொழில் உறவுச் சட்டத்துக்குப் பணிந்தவரும் இவர்தான்.

9

இவருடைய கனவுகளுக்கு சக்கரங்கள் மட்டுமா இருந்தன? இறக்கைகளும் இருந்தன.

இரண்டாம் உலகப் போரின் போது எட்டாயிரம் விமானங்கள் தயாரித்தது ஃபோர்ட் மோட்டார் நிறுவனம்.

10.

புயல் எத்தனை முறை வந்தாலும் தாக்குப்பிடிக்காது. புயலுக்கு ஒவ்வொரு முறையும் தாக்குப்பிடித்தால் போதும் என்று புரிந்துவைத்திருந்தார் ஃபோர்ட்.

பங்குச் சந்தையின் மிக மோசமான கரடி ஆதிக்க காலம் போல் இவருடைய தொழில் முயற்சிகள் முப்பது முதல் நாற்பது வயது வரை சறுக்கிக்கொண்டே இருந்தன.

இன்றைக்கு சென்னைக்கும் செங்கல்பட்டுக்கும் இடையில் கூட இவருடைய உலகளாவிய சாதனையின் ஒரு துண்டு கிடக்கிறது.

11.

அடுத்த இருநூறு ஆண்டுகளில் இந்தியாவில் ஆயிரம் ஹென்றி ஃபோர்டுகள் தோன்றுவார்கள்.

பாந்த்ரா-குர்லாவிலிருந்தோ.. பாப்பையநாயக்கன்பட்டியிலிருந்தோ…

12

ஹென்றி ஃபோர்ட் மிச்சிகனில் டியர்பார்ன் என்னும் பட்டிக்காட்டில் பிறந்தவர்.

நீங்கள் ஊர்க்குருவியும் இல்லை. பருந்தும் இல்லை. மனிதர்கள் கால்களைத் தரையில் ஊன்றிக் கொண்டே உயரப் பறக்க முடியும்.

ஒற்றையடிப் பாதை ஓடுபாதையாக இருக்கலாம். தப்பில்லை.

உங்களுக்குப் பறவை மூளையென்று
யாரேனும் சொன்னாலும்
கழற்றி வைத்துவிடாதீர்கள்
இறக்கைகளை.

பொறாமை தான் பாராட்டுப் பத்திரம்.
—————————————————————-
—–சீனிராஜ் சிவகுமார்

0 comments:

Post a Comment

 

2009 ·Exceptions by TNB