சீமை சிலுக்கு கார்ப்பரேஷன் - குரு திரைப்பட மதிப்பீடு

Wednesday, February 24, 2010

சீமை சிலுக்கு கார்ப்பரேஷன் - குரு திரைப்பட மதிப்பீடு

இப்படத்தின் கதை பெரும்பாலானோர்க்கு பரிச்சயமான ஒன்று தான். மணிரத்னம் எவ்வளவு தான் டிஸ்க்ளெய்மர் போட்டு படத்தை ஆரம்பித்தாலும், பேட்டிகளில், 'குரு படம் வளரத்துடிக்கும்/வளர்ச்சியடைந்த ஒவ்வொரு தொழிலதிபரின் கதை', என்று கதறினாலும், இது திருபாய் அம்பானியின் கதை தான்; சிற்சில மாற்றங்களுடன். கிராமத்தில் பிறந்து, இளவயதில் வெளிநாட்டில் பணிபுரிந்து, கனவுகளுடன் இந்தியாவிற்குத் திரும்பி, இந்தியத் தொழில் துறையில் கொடிநாட்டும் மனிதனின் கதை. கதையின் அடிப்படை: கனவு. அக்கனவினை எப்படி அவன் நனவாக்குகிறான் என்பதே கதை.

வெளிநாட்டில் பணிபுரிந்து விட்டு நாடு திரும்பும் குருநாத் தேசிகன் (இந்தியில் குருகாந்த் தேசாய்; அபிஷேக்), வியாபாரம் தொடங்க முதலீடு வேண்டி நண்பனின் அக்கா சுஜாதாவை (ஐஸ்வர்யா ராய்) மணக்கிறார். அங்கிருந்து மும்பை வரும் மூவரும், ஆரம்பத்தில் ஏற்படும் துயரங்களை நேர்மையான பத்திரிக்கையாளர் குப்தாவின் (மிதுன் சக்ரவர்த்தி) உதவியினால் சமாளிக்கிறார்கள். தொழிலில் சிறிது சிறிதாக முன்னேறி 'சக்தி கார்ப்பரேஷன்' என்ற குடையின் கீழ் 'சக்தி பாலியிஸ்டர்' (சூர்யா பாஷையில் 'சீமை சிலுக்கு'), 'சக்தி கெமிக்கல்ஸ்' போன்ற நிறுவனங்களை நிர்வகிக்கும் நிலைக்கு உயர்கிறார். இந்நிலையை அடைய, சில குறுக்கு வழிகளையும் நாடுகிறார். குரு சொல்வது போல், 'இந்த நாட்டுல பல கதவுகள் பணக்காரங்களுக்கு மட்டுமே திறக்குது. அதை திறக்குறதுக்கு ஏழையான நான் என்ன செய்ய முடியும்? சில இடங்கள்ல ஓங்கி மிதிச்சேன்; திறந்தது. சில இடங்கள்ல சலாம் போட்டேன்; திறந்தது. எங்க சலாம் போடனுமோ அங்க சலாம் போட்டேன். எங்க தட்டனுமோ அங்க தட்டுனேன்', முறையில்.

இவரின் இவ்வணுகுமுறை பிடிக்காத பத்திரிக்கையாளர் குப்தா, தனது உதவியாளர் ஷியாம் சரணவனனுடன் (இந்தியில் ஷியாம் சக்ஸேனா; மாதவன்) சேர்ந்து குருவை எதிர்க்கிறார். இவ்விருவரும், தங்களது 'சுதந்திர மணி' ('The Independent'; தின மணி; இந்தியன் எக்ஸ்பிரஸ்?) பத்திரிக்கையில் குருவின் அட்டூழியங்களைப் பற்றி எழுதுகிறார்கள். இவர்களின் முயற்சியால் ஒரு கட்டத்தில் 'சக்தி கார்ப்பரேஷன்' சீல் வைக்கப்படுகிறது. காரணம்: பொருட்கள் உற்பத்திக்காக, வெளிநாடுகளிலிருந்து இயந்திரங்களை கடத்தி வந்ததும், அனுமதி பெறாமல் ஒரு சில யூனிட்களை நடத்தியதும் தான். பணம் முதலீடு செய்த, பொதுமக்கள் பணத்தைக் கேட்டு நெருக்க, அவர்களைக் கட்டுப்படுத்த முடியாத அதிர்ச்சியால் பக்கவாதத்தினால் (ஸ்ட்ரோக்) பாதிக்கப்படுகிறார். அரசு இலாக்காக்கள் இவருக்கு எதிராக விசாரணைக் கமிஷன் வைக்கிறது.

இதனை எப்படி சமாளித்து, நிறுவனங்களை மீட்கிறார் என்பதே மீதக் கதை.

அருமையான இக்கருவை, மணிரத்னம் இன்னும் சிறப்பான முறையில் திரைப்படமாகக் கொடுத்திருக்கலாம். அனைத்து காட்சிகளுமே யூகிக்கக்கூடிய வகையில் அமைத்துள்ளது பெரும் குறைபாடு. படத்திற்கு நங்கூரமாக இருப்பது அபிஷேக்கின் நடிப்பு, ராஜீவின் கேமரா மற்றும் கலை. இயக்குனரின் கை வண்ணம், 1950-60ம் ஆண்டுகளை திரையில் நிறுத்துவதில் மட்டுமே தெரிகிறது. அப்பளுவின் பெரும்பகுதியை ஆர்ட் டைரக்டரும், ஒளிப்பதிவாளரும் பகிர்ந்து கொண்டிருப்பார்கள். இதில் மணிரத்னத்தின் உழைப்பு போதாது. அலைபாயுதே போல், கதை / திரைக்கதை அமைக்க வேண்டிய வேலை இதில் குறைவே.

அபிஷேக்கின் நடிப்பு அபாரம். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, இயலாத நிலையில் மருத்துவமனையில் படுத்திருக்கும் காட்சியில் அவரது முகபாவம் அற்புதம். ஐஸ்வர்யா ராயின் நடிப்பும் நன்றாகவே இருக்கிறது.

மாதவன் எப்பொழுது படங்களில் நிறுத்துவாரோ, அப்போது தான் மக்களுக்கு விடிவுகாலம். எல்லா படங்களிலும் ஒரே மாதிரியான முக பாவனை. ஒவ்வொரு வரிக்கும், வாயை
திறந்தும், மூடியும் வித்தியாசமாக முக பாவனங்களைக் கொடுக்கிறார். முக்கியமாக, மிதுன் சக்ரவர்த்தி, அபிசேக்கைப் (குருநாத் தேசிகன்) பற்றிய மாதவனின் எண்ணத்தை வெளிப்படுத்துமாறு கூறும் காட்சி. தாங்க முடியவில்லை. அவரை விட்டு விட்டால், மணிரத்னத்திற்கு நல்லது; தமிழ் ரசிகர்களுக்கும் தான். அவரால் உருப்படியாக அழக்கூட
முடியவில்லை (வித்யா பாலன் இறக்கும் காட்சியில்). இவரை விட பல சிறந்த நடிகர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். வேறு யாருக்காவது வாய்ப்பு கொடுத்திருக்கலாம். மாதவனின் பாத்திரம் பத்திரிக்கையாளர் குருமூர்த்தியின் பாத்திரம் என்று கேள்விப்பட்டேன். உண்மையா?

வித்யாபாலன் பத்திரிக்கையாளர் குப்தாவின் பேத்தி பாத்திரத்தில் நடித்திருக்கிறார். சிறு வயதில் வியாதியினால் பாதிக்கப்பட்டு நடக்கும் தன்மையை இழக்கும் இவர், இடையில் மாதவனை மணந்து ஒரு வருடத்தில் இறந்து போகிறார். இவரது பாத்திரம் படத்திற்கு சிறிதும் அவசியமில்லை. ஒரு வேளை, குருவிற்கும், குப்தாவிற்கும் தொழிலுக்கும் அப்பாற்ப்பட்டு தனிப்பட்ட முறையில் நல்ல உறவு இருக்கிறது என்பதை காட்டுவதற்காக, மணிரத்னம் இப்பாத்திரத்தைப் படைத்திருக்கலாம்.

மாதவன், வித்யா பாலன் பாத்திரங்களைத் தவிர்த்து விட்டு, மிதுன் சக்ரவர்த்தியே அபிஷேக்குடன் மோதுவது போல் காட்டியிருந்தால் இன்னும் நன்றாயிருந்திருக்கும்.

கிளைமேக்ஸ்:

அரசு இயந்திரங்களை (அரசு அதிகாரிகள், அமைச்சர்கள்) தவறாகப் பயன்படுத்தி நிறுவனத்தினை வளர்த்த குற்றத்திற்காக, விசாரணைக் கமிஷன் முன்பாக, குரு தனது தரப்பு வாதங்களை எடுத்து வைக்கிறார். தனது தரப்பு வாதங்களாக, 'நான் சின்ன வயசுல கஷ்டப்பட்டேன்; இப்ப நல்லா இருக்கேன்; என்னால நாட்டுல பொருளாதாரம் வளர்ந்திருக்கு', என்று கூறும் காரணங்கள் சிறிதும் பொருந்தாத வகையில் இருக்கிறது.

இசை: படத்திற்கு மிகப்பெரிய பலவீனம். பின்னணியில் தேடித் தேடி பார்த்தாலும் ரகுமான் கிடைக்கவில்லை. இரண்டு பாடல்களை மட்டும் பின்னணியில் ஒலிக்கவிட்டு விட்டு ரகுமான் தூங்கச் சென்று விட்டாரோ என்னவோ? ஒரு வேளை, 'நாம் என்ன தான் உயிரைக் கொடுத்து இசையமைத்தாலும் மணிரத்னம் படங்கள் (உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து) கவனிக்கப்படாமல் போய் விடுகின்றன. இதற்கு ஏன் இவ்வளவு சிரத்தை எடுப்பானேன்?', என்று நினைத்திருப்பாரோ என்னவோ? இரண்டு நல்ல பாடல்கள் படத்திலேயே இல்லை. சுமாரான பாடலான 'Barse Ro', மற்றும் மோசமான பாடலான, 'ஜோடி' பாடல்களை படத்தில் வைத்ததன் காரணம் புரியவில்லை. 'ஜா ஹே' பாடலை அபிஷேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது, அபிஷேக்கின் குழந்தைகள் கோரஸாகப் பாடுமிடம் மட்டும் அழகு. அது கூட மணிரத்னத்தின் கைவண்ணமே.

ராஜீவ் மேனன் குறிப்பிட்டுச் சொல்லும்படி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவரது (மற்ற ஒளிப்பதிவாளர்களது) மற்ற படங்களில் வரும் ஒரு குறை இப்படத்தில் ஓரளவிற்கு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. உ.ம். மழைக் காட்சியை, பெரும்பாலும் வேறு வழியில்லாது, வெயிலடிக்கும் தருவாயில் எடுப்பது இப்படத்தில் ஓரளவிற்குத் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஐஸ்வர்யா ராயின் அறிமுகப்பாடலில் அங்கங்கு இக்குறையைக் காண முடிகிறது. 1960 காலகட்டங்களில் கம்ப்யூட்டர் பிரிண்ட் அவுட்கள் இருந்ததா? அபிஷேக் பயணம் செய்யும் ஹெலிகாப்டரில், 'No Smoking' & 'Fasten your seat belt' என்று லேசர் பிரிண்ட் ஒட்டப்பட்டதை எப்படி கவனிக்காமல் விட்டார்கள் ஒளிப்பதிவாளரும், இயக்குனரும்? மேலும் அதே ஹெலிகாப்டர் இறங்கும் போது, 'டாடா' என்று இப்போதைய லோகோ நன்றாக பின்னணியில் தெரியும். இது போன்ற பல தவறுகளைத் தவிர்ப்பதற்காக, நிறைய 'குளோஸ் அப்' காட்சிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இப்படத்தை முதலில் ஹிந்தியில் பார்த்து விட்டு, பின்னர் தமிழில் பார்த்தேன். ஹிந்தியில் சுத்தம் புரியவில்லை. தமிழில் பரவாயில்லை. ஹிந்தி டப்பிங் படம் பார்ப்பது போன்ற உணர்வு சிறிதும் தெரியாத வகையில் தமிழாக்கம் செய்த 'டும் டும் டும்' டைரக்டர் அழகம் பெருமாளுக்குப் பாராட்டுக்கள். அபிஷேக்கிற்கு சூர்யா குரல் கொடுத்திர்க்கிறார். ஐஸ்வர்யாவிற்கு நடிகை ரோகிணி குரல் கொடுத்திருக்கிறார். இருவருமே திறம்படச் செய்திருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராயிற்கு பின்னணி கொடுத்தது யார் என்று படம் பார்க்கும் போது, பல கேள்விகள். சுகாஸினியா அல்லது சவீதாவா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ரோகிணியின் குரலென்றே அறியப்படாத அளவிற்கு சிறப்பாகச் செய்திருக்கிறார்.

என்னைக் கேட்டால், படம் பரவாயில்லை என்று சொல்வேன்.

3 / 5 மதிப்பெண்கள் கொடுக்கலாம்.

நடிப்பு: அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மிதுன் சக்ரவர்த்தி, மற்றும் பலர்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
ஒளிப்பதிவு: ராஜீவ் மேனன்
இயக்கம்: மணிரத்னம்
தயாரிப்பு: மெட்ராஸ் டாக்கீஸ் (ஜி. சீனிவாசன், மணிரத்னம்)

ஸ்ருசல்

0 comments:

Post a Comment

 

2009 ·Exceptions by TNB