இட்லி சாம்பார் எனக்குப் பிடிக்கும்
அனில் அம்பானி...
சொத்து மதிப்பு சுமார் எண்பதாயிரம் கோடியை எட்டி விட்டது என்றாலும் அவர் இன்னமும் சாதாரண மனிதராகத்தான் இருக்கிறார். உலகில் இருக்கும் கோடீஸ்வரர்களில் அவர் ஒருவர் என்பதை நம்பமுடியவில்லை. கையில் சூரியகதிர் இதழுடன் அவரைச் சந்தித்தோம். 'வாங்க.. வாங்க.. உட்காருங்க' அவர் பேசிய தமிழ்ப் பேச்சு வியப்பில் ஆழ்த்தியது. ''என்ன அப்படிப் பார்க்கிறீர்கள். எனது சகோதரி சென்னையில் இருக்கிறாள். அவள் நன்றாக தமிழ் பேசுவாள். எனவே எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும். தமிழ் கலாசாரம் மிகவும் பிடிக்கும். தமிழர்களின் மீது எனக்கு மிகுந்த மரியாதையே உண்டு'' என்று கூறினார்.
புள்ளி விவரக் கணக்கெல்லாம் கலக்காத ஜாலி சந்திப்பு. அவருடைய வியக்கவைக்கும் சுறுசுறுப்பை பற்றித்தான் கேட்கத்தோன்றியது.
''நான் தினமும் காலையில் ஐந்தரை மணிக்கு எழுந்து விடுவேன். ஆறரை மணிக்குள் அனைத்து செய்தித்தாள்களையும் படித்து விடுவேன். எனது கம்பெனி பற்றிய செய்திகள் எனது இமெயில் மூலம் எனக்கு கிடைக்கும். அதையும் பார்த்துவிடுவேன். எனது தந்தை திருபாய் அம்பானி தினமும் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதை நான் அப்படியே கடைப்பிடிக்கிறேன். அப்போது உடலில் ஏற்படும் பரவச உணர்வை வார்த்தைகளால் சொல்லமுடியாது. அதன் பிறகுதான் எனது அன்றாட வேலைகளைத் துவக்குகிறேன்” என்றார்.
உச்சநீதிமன்றத்தில் நடந்துகொண்டு இருக்கும் வழக்கு பற்றி பேச்சு திரும்பியது. ''என் மூத்த சகோதரர் முகேஷ் அம்பானி என் முதுகில் குத்திவிட்டார். அம்மா முன்னிலையில் ஒப்பந்தம் செய்துகொண்டு பிறகு அதை அமல்படுத்த முடியாது என்று கூறுவது என்ன நியாயம் கூறுங்கள்?'' என்றார். ''மத்திய அரசுடன் கூட்டு சேர்ந்து ஒப்பந்தத்தை மீறி செயல்படுவதாக கருதுகிறேன். நான் எனது பங்குதாரர்கள் நலன் கருதி உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றேன். எனக்கு நீதித்துறை மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன்.''
இந்த வழக்கில் வெற்றி பெற்றால் அனிலுக்கு கிடைக்கும் லாபம் எவ்வளவு தெரியுமா சுமார் ஏழு லட்சம் கோடி ரூபாய். முகேஷுக்கு கிடைக்கும் லாபம் பதினேழு ஆண்டுகளில் தொண்ணூறு லட்சம் கோடி ரூபாய். அனில் அம்பானி ஐம்பது வயது ஆனாலும் சின்ன பையன் மாதிரிதான் இருக்கிறார். இந்தி நடிகை டினா முனிமை திருமணம் செய்துகொண்டு இரண்டு மகன்கள் அவருக்கு உண்டு. தனது பிசினஸ் எல்லா துறைகளிலும் இருக்கவேண்டும் என்று எண்ணுகிறார். சினிமா துறையில் அமிதாப்பச்சனுடன் கூட்டு சேர்ந்து ஒரு நிறுவனம் ஆரம்பித்து உள்ளார். ராஜ்ய சபா உறுப்பினராக முலாயம் சிங் மூலம் தேர்ந்து எடுக்கப்பட்டார். ஆனால் இரண்டே ஆண்டுகளில் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது கடும் உழைப்பின் மூலம் இந்தியாவின் அதிக பணக்கரார் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் அனில்!
விடைபெறும்போது “ பை தி பை எனக்கு இட்லி சாம்பார்னா ரொம்ப பிடிக்கும். என் சென்னை சிஸ்டர் வீட்டுல காலையில் இட்லி, பொங்கல் போன்ற தென்னிந்திய வாசனை பிரமாதமாகப் புறப்படும்.
இன்னொரு சிஸ்டர் கோவாவில் இருக்கிறாள். அங்கே காலை ஏழு மணிக்கெல்லாம் பிரேக்ஃபாஸ்டாக மீன் வாசனை மணக்கும்!” என்று சிரித்தார்
0 comments:
Post a Comment